Wednesday, November 13, 2019

பெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்

பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார்.


அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர்.
பெண்களின் உடல்நலத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவர், “ட்விட்டரில் வாழும் மகப்பேறு மருத்துவர்” என்று குறிப்பிடப்படுகிறார்,
"த வஜைனா பைபிள்" என்கிற குன்டரின் சமீபத்திய புத்தகம் பல நாடுகளில் அதிக அளவில் விற்கப்படும் புத்தகங்களில் ஒன்றாகும்.
நடைமுறை ஆலோசனைகளை கொண்டுள்ள இந்த புத்தகம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்கள் தங்களின் சுகாதாரத்தை கவனிக்க உதவவும் எழுதப்பட்டதாகும். பெண்குறி பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென டாக்டர் குன்டர் விரும்புகின்ற சில உண்மைகளை இங்கு பகிர்கிறோம்.
1. யோனிக் குழல் மற்றும் யோனிப் புழை பற்றி அறிந்து கொள்வது முக்கியம்
யோனிக் குழல் (vagina) உடலுக்குள் உள்ளது. கருப்பையை வெளி உலகுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. உங்களது உடையை தொடுகிற வெளியில் பார்க்கக்கூடிய பகுதி யோனிப் புழை (vulva).
நாசூக்காக குறிப்பிடும் சொற்களை பயன்படுத்தாமல், இவற்றின் சரியான சொல்லை அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் குன்டர்.
"யோனிக் குழல், யோனிப் புழை என்ற சொற்களை சொல்ல நீங்கள் தயங்குவது, அதில் அசிங்கமான அல்லது வெட்கக்கேடான ஏதோ இருப்பதான குறிப்பைத் தருகிறது.
யோனிப் புழையின் வெளிப்பகுதியைக் குறிப்பிடும் “ப்யூடென்டா” என்கிற மருத்துவ துறை சொல், “வெட்கக்கேடு” என பொருள்படும் “ப்யூடெட்” என்கிற லத்தீன் சொல்லில் இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இத்தகைய சொற்களை பயனப்படுத்துவது, பெண்களுக்கு உணர்ச்சிபூர்வமாக தீங்கு விளைவிக்கக்கூடியது மட்டுமல்ல, மருத்துவ ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்று குன்டர் நம்புகிறார். சரியான சிகிச்சை பெற முடியாமல் போவதற்கு, சரியாக என்ன செய்கிறது என்று சொல்வதற்கு நோயாளிகளால் முடியாமல் போவதே காரணமாகும்.
2. யோனிக் குழல் தன்னையே சுத்தப்படுத்திக் கொள்கிறது
தங்கள் யோனிக் குழல் வாசனையை மாற்றியமைக்க சில நறுமண பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பல பெண்கள் நம்புகிறார்கள். இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குன்டர் கவனித்து வந்துள்ளார்.
வட அமெரிக்காவில் கடந்த ஆண்டில் 57 சதவீத பெண்கள் தங்கள் யோனிக் குழாயை சுத்தப்படுத்தியுள்ளனர். பலரும் தங்களின் காதலர் இவ்வாறு செய்ய ஊக்கமூட்டியதாக கூறியுள்ளனர்.
ஆனால், யோனிக் குழலை சுத்தப்படுத்தி கொள்ள எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று டாக்டர் குன்டர் தெரிவிக்கிறார்.
“யோனிக் குழல் தன்னையே சுத்தப்படுத்திக் கொள்கிறது” என்கிறார் அவர். நறுமண பொருட்களை இதற்கு பயன்படுத்துவதற்கு எதிராக அவர் குறிப்பாக எச்சரிக்கிறார்,
தண்ணீர் கூட இந்த மென்மையான இயற்கை அமைப்பை சீர்குலைக்கலாம்; பாலியல் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தை அதிகரிக்கும்.
பெண்கள் மத்தியில் பரவி வரும் மற்றொரு பழக்கம், நீராவி செலுத்தி சுத்திகரிப்பது. இது அவசியமற்றது. தீக்காயத்தை ஏற்படுத்தும் இடர்ப்பாடு உடையது.
யோனிப்புழையை - அதாவது பெண்ணுறுப்பின் வெளிப்பாகம்- தேவைப்படும்போது, தண்ணீர் அல்லது மென்மையான பொருளை பயன்படுத்தி சுத்தப்படுத்தி கொள்ளலாம்.
சோப்பை பயன்படுத்துவது, இந்தப் பகுதியின் மேற்பரப்பில் உள்ள அமிலப் படலத்தை அகற்றும். இந்த அமிலப் படலம்தான் தோலில் தண்ணீர் புகாமல் பாதுகாக்கும் இழையாக செயல்படுகிறது.
மாதவிடாய் நிற்கும்போது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, இப்பகுதி உலர்வாக மாறி அசௌகரியமாக இருந்தால், சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் போன்றதைப் பயன்படுத்தலாம்.
யோனிக் குழல் செல்கள் ஒவ்வொரு 96 மணி நேரமும் புதிதாகத் தோன்றுகின்றன. தோலின் பிற பகுதிகளில் ஏற்படுவதைவிட மிக விரைவாக அங்கு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் விரைவாக குணமாகிவிடும்.
3. உங்கள் யோனிக் குழல் ஒரு தோட்டம் போன்றது
யோனிக் குழலில் ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா கூட்டமே உள்ளது. அந்த பாக்டீரியாக்கள் யோனிக்குழலின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.
“பல வகை பாக்டீரியாக்களையும் உள்ளடக்கிய ஒரு தோட்டம் போன்றது யோனிக்குழல் நுண்ணுயிரித்தொகுதி. பெண்குறி இயற்கை அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க இவை ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன” என்று மருத்துவர் குன்டர் தெரிவிக்கிறார்.
சற்றே அமிலத் தன்மையுடைய சுற்றுச் சூழலை உருவாக்கும் பொருட்களை நன்மை செய்யும் பாக்டீரியா உற்பத்தி செய்கின்றன. இதனால் தீய பாக்டீரியாக்கள் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் வழுவழுப்பாக்கும் சளி போன்ற பொருள் உருவாகவும் இந்த பாக்டீரியாக்கள் காரணமாகின்றன.
இதனால்தான், பாக்டீரியாவுக்கு எதிரான சுத்தப்படுத்தும் பொருட்களை கொண்டு துடைப்பது அல்லது சுத்தப்படுத்தி கொள்வது நல்லதல்ல. பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரித்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
இதுபோல, யோனிக் குழலை உலர செய்வதற்கு தலைமுடியை உலர வைக்கின்ற கருவியை பயன்படுத்த கூடாது என்கிறார் குன்டர். அங்கிருக்கும் தோல் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
4. அந்தரங்க முடி வளர காரணமுண்டு
அந்தரங்க முடியை நீக்கிவிட வேண்டும் என்ற போக்கு பெண்களிடத்தில் அதிகரித்து வருவதை மருத்துவர் குன்டர் கவனித்து வந்துள்ளார். அந்தரங்க பேன்களை ஒழிக்க இது உதவும். ஆனால், இதற்காக கையாளும் முறைகள் அந்தரங்க முடிகளை அழித்துவிடும் ஆபத்தும் உண்டு.
மெழுகு, மழிப்பது போன்ற வழிகள் மூலம் முடியை அகற்றும்போது தோலில் நுண்ணிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள். வெட்டுக்கள், சிராய்ப்புகள், தொற்றுநோய்களும் இதனால் ஏற்படுகிறது” என்கிறார் மருத்துவர் குன்டர்.
அந்தரங்க முடியை நீக்குபவர் மெழுகு தேய்க்க பயன்படுத்தும் குச்சியை அந்த மெழுகில் ஒருமுறைக்கு மேலாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே குச்சியை கொண்டு மீண்டும் மீண்டும் எடுத்து தேய்க்க பயன்படுத்துவதால் பிற வாடிக்கையாளர்களுக்கு பாக்டீரியா பரவலாம்.
அந்தரங்க முடியை மழிப்பதாக இருந்தால் சுத்தமான ரேசரை பயன்படுத்தவேண்டும். சருமம் வளரம் திசையிலேயே மழிக்கவேண்டும். எதிர்த் திசையில் மழித்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்கள் இது பற்றி தெரிந்து கொண்டு செயல்பட வேண்டுமென மருத்துவர் குன்டர் கூறுகிறார்,
“அந்தரங்கத்தில் முடி வளர்வதற்கு ஒரு காரணம் உள்ளது. இது அநேகமாக தடுப்பு கருவியாகவும் மற்றும் சருமத்திற்கான பாதுகாப்பாகவும் இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
5. முதுமை அடைவது யோனிக் குழலை பாதிக்கலாம்
மாவிடாய் வந்து அல்லது குழந்தை பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு கருப்பை முட்டைகள் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. மாதவிடாயும் நின்று விடுகிறது. பெண்களை கருவளம் உடையவர்களாக வைத்துகொள்ளும் ஹார்மோன் சுரப்பிகள் திடீரென குறைவது, குறிப்பாக சொன்னால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது யோனிக் குழலையும், யோனிப் புழையையும் பாதிக்கும்.
சளி போன்ற நிலையில், ஈரப்பதமாக வைக்கப்பட்டிருந்த இந்த திசுக்கள் நலிய தொடங்கலாம். அதன் விளைவாக ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து, உடலுறவின்போது வழுவழுப்பு இல்லாமல் வலி ஏற்படும்.
“இதனை பெண்கள் தெரிந்து வைத்திருப்பது உண்மையிலேயே முக்கியமானது” என்று கூறும் மருத்துவர் குன்டர், “இது பற்றி தெரிந்து வைத்திருந்தால் நீங்கள் துன்பப்பட வேண்டி இருக்காது” என்கிறார்.
உடலுறவு கொள்வது எல்லாவற்றையும் சரியாக வைத்துக் கொள்ள உதவும் என்று சரியாக ஆராயாத கருத்து ஒன்று நிலவுகிறது. ஆனால் நுண்ணதிர்வுகள் யோனிக் குழல் தசைகளை மிகவும் பாதிக்கும்.
பிபிசி உலக சேவையின் ஹெல்த் செக் பிரிவுக்குப் பேசியபோது குன்டர் இவற்றைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

THANK YOU FOR YOUR COMMENT